மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2021-02-07 20:09 GMT
கடத்தூர்
மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும் என கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, 221 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
கோபி சட்டமன்ற தொகுதியில் கடந்த 8 மாதங்களில் தனி மனித கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
5,000 பேருக்கு வேலை
நிதி பற்றாக்குறை இருந்ததால் தாலிக்கு தங்கம் வழங்க கால தாமதம் ஏற்பட்டது. இனி வருங்காலங்களில் விண்ணப்பித்தவுடன் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. குழந்தைகள் சிறந்த கல்வியாளர்களாக வரவேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக உள்ளது.
வருகிற 9-ந் தேதி (நாளை) கோபியில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சுயஉதவிக்குழு கடனும் ரத்து
விவசாயிகளின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என நீங்கள் (மகளிர் சுயஉதவி குழுவினர்) நினைக்கலாம். உங்களது சுயஉதவிக்குழு கடனும் ரத்து செய்யப்பட உள்ளது என்பதை சூசகமாக தெரிவிக்கிறேன். இந்த அரசு தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்களை நாடி வர உள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கோபி பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நிகழ்ச்சியில் பவானிசாகர் தொகுதி எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.,, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. காளியப்பன், நகர செயலாளர் காளியப்பன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்து ரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்