தென்காசி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை

தென்காசி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2021-02-07 19:47 GMT
தென்காசி:
தென்காசி அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர் 
தென்காசி அருகே உள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 53). இவர் பாவூர்சத்திரம் திப்பணம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி இவாஞ்சலின் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன், அதே ஊரில் ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். 
நகைகள் கொள்ளை
இவாஞ்சலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சந்திரசேகர் அழைத்து சென்றார். அவருடன் மகனும் சென்றார்.  பின்னர் இரவில் 3 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.
வலைவீச்சு
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்று உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்