இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், விநாயகமுருகன், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துண்டு பிரசுரம் வினியோகம்
இதில் போலீசார், அரசு அலுவலகங்கள், வாகன ஷோரூம்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெற வந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தபடி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு முடிவடைந்தது. பேரணியின்போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.