உடுமலை பகுதியில் மானாவாரி சாகுபடியில் கோதுமை சாகுபடி

உடுமலை பகுதியில் மானாவாரி சாகுபடியில் கோதுமை சாகுபடி சேது சில விவசாயிகள் அசதி வருகிறார்கள்.

Update: 2021-02-07 18:23 GMT
போடிப்பட்டி,

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியில் முக்கிய இடத்தில இருப்பது கோதுமை உற்பத்தியேயாகும். பொதுவாக மலைப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமவெளிப்பகுதிகளிலும் பயிரிடும்படியான புதிய ரகக்கோதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதனால் நன்கு வடிகால் வசதியுள்ள வண்டல் மற்றும் கரிசல் மண் பூமியில் குளிர் காலங்களில் கோதுமை சாகுபடி செய்யும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வட மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த கோதுமை சாகுபடியில் தமிழக விவசாயிகளும் ஈடுபடத் தொடங்கினர். 

இந்தநிலையில் உடுமலையையடுத்த அந்தியூர், ஆர் வேலூர் பகுதிகளில் சில விவசாயிகள் மானாவாரியில் கோதுமை சாகுபடி செய்து அசத்தியுள்ளனர். பொதுவாக உடுமலை பகுதியில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதிலேயே விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 இதுதவிர சோளம், கம்பு போன்ற சிறுதானியப் பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். இந்த சூழலில் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய கோதுமையை பாசன வசதியில்லாத பூமியில் மானாவாரியில் மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் துணிச்சலுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மையாக உள்ளது. 

இதுகுறித்து ஆர்.வேலூரைச்சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

நமது பகுதியில் சில ஆண்டுகளாகவே மானாவாரியில் கோதுமை சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளோம். இந்த பூமி பி.ஏ.பி. பாசனத்துக்குட்பட்டதாகும். ஆனால் பி.ஏ.பி. பாசனத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையே தண்ணீர் கிடைக்கும் என்பதால் நடப்பு ஆண்டில் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்காது.
 பொதுவாக வடகிழக்குப்பருவமழை தொடங்கியதும் புரட்டாசிப் பட்டத்தில் கோதுமை சாகுபடிப்பணிகளைத் தொடங்கி விடுவோம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் ஐப்பசியில் தான் விதைப்புப்பணிகளை மேற்கொண்டோம். அனுபவ விவசாயிகளிடமிருந்தே இதற்கான விதைகளைப் பெற்று விதைப்பு செய்தோம். 4 மாத பயிரான கோதுமைக்கு ஏக்கருக்கு 12 கிலோ விதைகள் தேவைப்பட்டது.

இந்தநிலையில் மார்கழி மாதத்தில் எதிர்பாராத அளவுக்கு தொடர் மழை பெய்ததால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு பெருமளவு செடிகள் வீணாகி விட்டது. இதனால் இந்த ஆண்டு மகசூல் மிகவும் குறையக்கூடும். நல்ல மண் வளம் இருந்தால் நமது பகுதியிலும் கோதுமை சாகுபடி செய்வது சாத்தியம் தான். அதற்கான வழிகாட்டல்களையும் வேளாண்துறையினர் வழங்குகின்றனர். மேலும் நெல் அறுவடை எந்திரம் மூலமே அறுவடை மேற்கொள்ள முடியும். இல்லையென்றால் கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து மக்காச்சோள அறுவடை எந்திரத்தின் மூலம் கதிரடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுவதால் ஒரே நேரத்தில் அறுவடை நடைபெறுகிறது. இதனால் வரத்து அதிகரித்து விலை குறைகிறது. எனவே கோதுமை போன்ற மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். 

மேலும் செய்திகள்