பெண் போலீசிடம் நகை வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது - 7 பவுன் சங்கிலி மீட்பு

கயத்தாறில் பெண் போலீசிடம் நகையை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் சங்கிலி மீட்கப்பட்டது.

Update: 2021-02-07 17:46 GMT
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த உத்தண்டராமன் மகள் செல்வ ராதிகா(வயது23). இவர் சென்னை நகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
விடுமுறையில் சாலைப்புதூரிலுள்ள வீட்டுக்கு அவர் வந்திருந்தார். கடந்த 3-ந் தேதி ஊரிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் கயத்தாறு வந்தார். அங்குள்ள கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர் மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் சென்றபோது, திடீரென்று எதிரே வந்த 3 வாலிபர்கள், அவரை வழிமறித்து, கீழே தள்ளி விட்டனர். அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், செல்வ ராதிகாவிடம் நகையை வழிப்பறி செய்தவர்கள், வீரமணிகபுரம் சுரேஷ் மகன் சபரிமணி( 20),  அதே ஊரை சேர்ந்த முருகப்பெருமாள் என்ற விக்கி( 23), பசுவந்தனை தீத்தாம்பட்டி மூக்கையா மகன் சிவசுப்பிரமணியன்(25) என தெரிய வந்தது. கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், போலீசார் பாலமுருகன், பாலா ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்வராதிகாவிடம் வழிப்பறி செய்த 7 பவுன் சங்கிலி மீட்கப்பட்டது. கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்