திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 1,433 வாக்குச் சாவடி மையங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 1,433 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.;
திருப்பத்தூர்
கருத்து கேட்பு கூட்டம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பிரித்து, புதிதாக 403 கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைப்பது குறித்து, அரசியல் கட்சியி பிரமுகர்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 256 வாக்குச் சாவடி மையங்கள் இருந்தது. தற்போது 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள மையங்கள் பிரிக்கப்பட்டு கூடுதலாக 118 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆம்பூர் தொகுதியில் ஏற்கெனவே 242 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது, தற்போது கூடுதலாக 106 மையங்கள் அமைக்கப்படுகிறது.
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 267 வாக்குச் சாவடி மையங்கள் இருந்தது, தற்போது கூடுதலாக 93 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 265 வாக்கு சாவடி மையங்கள் இருந்தது, தற்போது கூடுதலாக 86 மையங்கள் அமைக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்கலாம்
இதன்படி ஏற்கெனவே 1,030 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. தற்போது கூடுதலாக 403 மையங்கள் அமைக்கப்படுவதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,433 வாக்குச்சாவடி மையங்கள் இருக்கும்.
இந்த வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம். அந்த கருத்துக்கள் மீது உடனடியாக விசாரணை செய்து சரிசெய்யப்படும். பின்னர் இறுதி பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
105 பதற்றமானவை
மாவட்டத்தில் 105 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறிப்பட்டுள்ளது. இங்கு மத்திய அரசு பணியாளர்களின் நேரடி பார்வையில் தேர்தல் நடத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் நேர்முக உதவியார் வில்சன்ராஜசேகர், தேர்தல் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், துணை தேர்தல் தாசில்தார்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துண்டனர்.