ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.;
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கே.வி.ஆர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46) இவருக்கு மஞ்சுளா (42) என்ற மனைவியும், இந்துமதி (28), மேகலா (25) என்ற 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. பாஸ்கரன் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று காலை வழக்கம்போல மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் பாஸ்கரன் தனது அறையில் இருந்த மின்விசிறியில் நைலான் கயிறால் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊராட்சி செயலாளர் தூக்கில் தொங்குவதை பார்த்த அந்த வழியாக சென்ற கிராம மக்கள், ஊராட்சி தலைவர் அரிபாபு மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த செய்தியானது கிராமம் முழுவதும் பரவியதை தொடர்ந்து ஏராளமானோர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உருக்கமான கடிதம்
மேசையின் மீது அவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதியதாக உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், ‘நான் 1998-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறேன். இதுநாள் வரை எனது பணியில் எந்த தவறுகளும் நடக்காமல் பணி செய்து வந்துள்ளேன். 1.1.2020 முதல் 6.2.2021வரை ஊராட்சியில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இந்த தவறான முடிவுக்கு தள்ளி விட்டார்கள் என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஸ்கரனின் மனைவி மஞ்சுளா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மறியல்
மேல் நல்லாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அறிந்ததும் ஊராட்சி அலுவலர்கள் சங்க தலைவர் மகேந்திரன் தலைமையில் அனைத்து ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் பாஸ்கரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். பாஸ்கரனின் உடலை கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அப்போது திரளான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம மக்கள் பாஸ்கரனின் சாவுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென ஆஸ்பத்திரி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையில், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று கொண்ட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊராட்சி செயலாளர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.