கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து பழுக்க வைத்த 15 டன் வாழைப்பழம் பறிமுதல்
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து பழுக்க வைத்த 15 டன் வாழைப்பழம் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் அங்கு ரசாயன கற்களை பயன்படுத்தியும், ‘ஸ்பிரே’ அடித்தும் செயற்கை முறையில் பழங் களை பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைகளில் இருந்து ரசாயனம் கலந்து பழுக்க வைத்த சுமார் 15 டன் வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். அந்த கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழ தார்களை மார்க்கெட் பின்புறம் உள்ள கழிவுகள் அகற்றும் இடத்துக்கு கொண்டு சென்று அழித்தனர்.