சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று பெரம்பலூா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினாா்.

Update: 2021-02-07 01:11 GMT
சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் பெரம்பலூரில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் நான்கு ரோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமை தாங்கினார். அவர், பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும். இதனை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் சென்றால் விபத்தில், விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடும், என்றார். இதையடுத்து அவர் சாலை பாதுகாப்பு தொடர்பான பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு மாத விழா உறுதிமொழியை மாணவர்களுடன் எடுத்துக்கொண்டார். இதில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், திருச்சி சுங்கச்சாவடியின் திட்ட மேலாளர் கருணாகரன், சீனியர் மேலாளர்கள் ரத்தினவேல், யோகேஸ்குமார், அறக்கட்டளை நிர்வாகி வித்யலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்