காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும் என்று முசிறியில் நடைபெற்ற ஏர் கலப்பை விவசாயிகள் சங்கம மாநாட்டில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

Update: 2021-02-07 00:13 GMT
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முசிறியில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏர் கலப்பை விவசாயிகள் சங்கம மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். 

அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், மெய்யப்பன், மாநில பொருளாளர் ரூபிமனோகரன், விஜயதாரணி எம்.எல்.ஏ, விஜய்வசந்த் ஆகியோர் தொடக்க உரைஆற்றினர்.  மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது? என்று கேள்வி கேட்டவர்களுக்கு இதோ இங்கே இருக்கிறது என நான் பதில் அளிக்க விரும்புகிறேன். 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாமல் உள்ளது. இங்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்துள்ளார். காங்கிரசால் மட்டுமே தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும். 

பாரதீய ஜனதாவுக்கு மாற்றான ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. ஒரு விபத்து காரணமாக பா.ஜ.க. ஆட்சி கட்டிலில் உள்ளார்கள். ராகுல்காந்தி மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் பழகி அவர்களது பிரச்சினைகளை, தேவைகளை அறிந்து வருகிறார். பா.ஜ.க. அரசியல் தலைவர்கள் போல் மேடையில் மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருப்பது தான் உண்மையான தலைமை. 

முன்னாள் பாரத பிரதமர் நேரு பொதுத்துறை நிறுவனங்களை வளர்த்தார். ஆனால் மத்திய அரசு எல்.ஐ.சி., ரெயில்வே போன்றவற்றை தனியார் மயமாக்கி வருகிறது. எதிர்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத இந்த அ.தி.மு.க. அரசு, தற்போது கடன் தள்ளுபடி செய்ததற்கு காரணம், தேர்தலை மனதில் வைத்து தான். தமிழக மக்கள் மிகுந்த புத்திசாலிகள் அவர்கள் தேர்தலை முன்னிட்டு கடனை தள்ளுபடி செய்துள்ளதை அறிவார்கள். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் மிக எதிரானது. இந்த சட்டங்களை செயல்படுத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெரிய முதலாளிகளிடம் மட்டுமே விலை பொருட்களை விற்க முடியும். வேளாண் சட்டங்களுக்கு பா.ஜ.க. கூட்டணி கட்சியே எதிர்த்தது. 
தமிழகத்தில் எடப்பாடி அரசு ரூ.2,500 கோடிக்கு டெண்டர் விட்டனர். இது தவறு என ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் எடப்பாடி அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு தடை ஆணை வாங்கினர். 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த தடையை உடைக்க மோடி அரசின் சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை. மற்றவர்களாக இருந்தால் சி.பி.ஐ. சீறிப்பாய்ந்து இருக்கும்.

காங்கிரஸ் தன்னுடைய சுயமரியாதையை பாதுகாக்கும். என்றென்றும் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத்தயாராக இருக்கும். இந்த நாட்டை மேம்படுத்த, இந்த நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த எங்களால் முடியும் என்பதை நான் உங்களுக்கு மிகுந்த பெருமையுடன் சொல்லி கொள்கிறேன். 

இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க தமிழக காங்கிரஸ் எல்லா திட்டங்களையும் வழங்கும். நாங்கள் உணர்ச்சிகரமாக பேசுகிறவர்கள் மட்டுமல்ல. அறிவுபூர்வமாக செயல்படக்கூடியவர்கள். சுயமரியாதையோடு இருக்கக் கூடியவர்கள். எங்களுடைய தன்மானத்தைக் காப்பாற்றி கொள்ளக்கூடியவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப்லூயிஸ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்