முசிறி ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை
முசிறி ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரசாந்த் (வயது 27). பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக ஜெம்புநாதபுரம் போலீசார், பிரசாந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த வேளையில் பிரசாந்த் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த பிரசாந்தை போலீசார் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரசாந்த், வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு;-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் அந்தப் பெண்ணின் சகோதரரை பிரசாந்த் மற்றும் அவரது தந்தை மணி ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் அவர் இறந்தார்.
இந்த கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மணி இறந்துவிட்டார். பிரசாந்துக்கு, கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் பிரசாந்த், மைனர் என்பதை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முசிறி அருகே ராகம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்தி சென்று, பிரசாந்த் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சிறுமியுடன் திருப்பூரில் பிரசாந்த் வசித்து வந்துள்ளார்.
தற்போது அந்த சிறுமி 2-வது முறையாக கர்ப்பம் தரித்ததாக தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிக்கு சென்ற போது ஆதார் அட்டை கேட்டுள்ளனர். ஆதார் அட்டை கேட்டு சிறுமியின் பெற்றோருக்கு அவர் போன் செய்துள்ளார். அப்போதுதான், தங்கள் மகள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூரில் வசித்து வந்த பிரசாந்தை போக்சோவில் கைது செய்து விசாரணைக்காக ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போதுதான் திடீரென போலீஸ் நிலையத்தின் மாடியில் இருந்து பிரசாந்த் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.