ஓசூர் நிதி நிறுவனத்தில் நகை கொள்ளை கைதான 7 கொள்ளையர்களும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

ஓசூர் நிதி நிறுவனத்தில் நகை கொள்ளை கைதான 7 கொள்ளையர்களும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு.

Update: 2021-02-06 23:58 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் புகுந்து ஊழியர்களை மிரட்டி 25 கிலோ நகைகள், பணம் ஆகியவற்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றனர். இதில் தொடர்புடைய வட மாநிலத்தை சேர்ந்த 7 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை, கடந்த 27-ந்தேதி ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனிடையே நேற்று முன்தினம், நிதி நிறுவனத்திற்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி? என்று கொள்ளையர்கள் போலீசாரிடம் நடித்து காட்டினர். இந்த நிலையில், நேற்றுடன் அவர்களது போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து, ஓசூர் ஜே.எம்.- 2 நீதிபதி தாமோதரன் முன்னிலையில் கொள்ளையர்கள் 7 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கொள்ளையர்கள் 7 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்று சேலம் மத்தியில் சிறையில் அடைத்தனர். வருகிற 1-ந்தேதி, மீண்டும், நீதிபதி முன்பு கொள்ளையர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்