மணப்பாறை அருகே தீராம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயம்

மணப்பாறை அருகே தீராம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-02-06 23:41 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் புனித அந்தோணியார் பெருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 770 காளைகளும், 269 வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரண்டு வந்திருந்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்
மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளையும், அதைத்தொடர்ந்து கோவில் காளையும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றில் பல காளைகள், வீரர்களுக்கு போக்கு காட்டியும், வீரர்களை அந்தரத்தில் பறக்கவிட்டும் சென்றன. இருப்பினும் பல காளைகளை வீரர்கள் அடக்கி அசத்தினர்.
26 பேர் படுகாயம்

காளைகள் களத்தில் நின்று விளையாடிய போதும், வீரர்கள் அடக்கிய போதும் அந்த பகுதியே ஆரவாரம் பூண்டிருந்தது. காளைகள் முட்டித்தள்ளியதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பரிசுகள்

இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சைக்கிள், பீரோ, பித்தளை, சில்வர் பாத்திரங்கள் என்று பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் மேற்பார்வையில் சுமார் 275 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு முறையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறுகின்றதா? என்று வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.

2-வது ஜல்லிக்கட்டு

வழக்கமாக பொங்கல் பண்டிகையின் கடைசி நாளில் இருந்தே திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா காலகட்டம் என்பதால் அதற்கான விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்ற நிலையில் சற்று காலதாமதமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று தீராம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2-வது ஜல்லிக்கட்டாகும்.

கூட்டமாக வந்ததால் பரிசு இல்லை

ஒரு மாட்டிற்கு வாடிவாசல் வழியாக இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மாடுகளை அழைத்து வரும் போது 10-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதைப்பார்த்ததும் அந்த மாட்டிற்கு பரிசு இல்லை என்று அறிவிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் அந்த காளையை பிடித்த வீரர்களுக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கேட்போரின் காதுக்கு விருந்தளித்த வர்ணனை

ஜல்லிக்கட்டு என்றாலே காளை களத்தில் நின்று விளையாடும் போதும், அதை வீரர்கள் அடக்கும் போது பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கும், வர்ணனையாளரின் வர்ணனைக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் தீராம்பட்டி ஜல்லிக்கட்டு வர்ணனை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. ஒரு காளை ஆக்ரோசமாக துள்ளிக்குதிக்க அதை ஒரு வீரர் லாவகமாக பிடிக்க இந்த போராட்டம் சற்று நேரம் நீடித்தது. அப்போது வர்ணனையாளர் மாடுபிடி வீரரை பாராட்டும் வகையில் “ஐ லவ் யூ” என சில முறை கூறி வர்ணனை செய்தது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்