பவானியில் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்; 25 பேர் கைது

பவானியில் வேளாண் சட்டங்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 25 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-02-07 04:17 IST
பவானி,


மத்திய அரசு கொண்டு் வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்யைாக நேற்று நாடு முழுவதும் சக்கா ஜாம் எனப்படும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பவானியில் வேளாண்மை புதிய திருத்த சட்டத்தை தடைசெய்யக்கோரி விவசாய சங்கங்கள் சார்பில் அந்தியூர் பிரிவு சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவருமான முனுசாமி தலைமை தாங்கினார்.

சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் ப.பா.மோகன், வேளாண்மை சட்டத்தை தடை செய்யக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் வக்கீல் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஜெகநாதன், நகர பொறுப்பாளர் மாணிக்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் 25 பேர் மதியம் 12.10 மணி அளவில் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு பவானியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்