சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டி?
சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
எதிர்பார்ப்பு
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்து அதனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் சேலம் மாவட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால் இந்த தேர்தலில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மீதமுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க.வுக்கு இணையாக தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியினர் தேர்தல் வேலைகளில் முன்கூட்டியே இறங்கிவிட்டார்கள். அதேபோல், முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் கடந்தமுறையை காட்டிலும் தற்போது 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இதற்காக 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைத்து அதில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டார்கள் என்று சொல்லலாம்.
அ.தி.மு.க.- தி.மு.க.
இதனிடையே, மண்ணின் மைந்தர் என்று அ.தி.மு.க.வினரால் அழைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சியினர் வீடு, வீடாக சென்று இப்போதே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. கடந்த மாதம் சேலத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டமும் நடத்தப்பட்டது. இதனால் 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
8 தொகுதிகளில்...
சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இருப்பினும் இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் போட்டியிடும் என கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணிக்கு விட்டு கொடுக்கும் என்று கட்சியினர் கூறி வருகிறார்கள்.
அதேபோல், தி.மு.க. கூட்டணியில் 9 தொகுதிகளில் தி.மு.க.வும், 2 தொகுதிகள் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கும் என்றும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேச்சு காணப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்து கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடையும் பட்சத்தில் யார்? யார்? எந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற நிலவரம் தெரியவரும்.