சேலத்தில் காலிமனை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை ஆணையாளர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை
சேலத்தில் காலிமனை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குப்பைகள் சேகரிப்பு
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபயிற்சியின் போது மாநகர பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சூரமங்கலம் மண்டலத்தில் டாக்டர் காலனி, சாஸ்திரி நகர், சுந்தரம் காலனி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் அத்வைத ஆசிரமம் ரோடு, சின்னத்திருப்பதி ரோடு, அடைக்கல நகர், எழில் நகர், அம்மாபேட்டை மண்டலத்தில் பழைய பிள்ளையார் கோவில் தெரு, விவேகானந்தர் தெரு, கொய்யா தோப்பு, மன்னார்பாளையம் பிரிவு சாலை, தாதம்பட்டி ரோடு, பாரதியார் தெரு, வ.உ.சி நகர், ஆறுமுக நகர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஆர்.ஆர். பேர்லாண்ட்ஸ், மேட்டு வள்ளலார் தெரு, அன்னதானப்பட்டி காவலர் குடியிருப்பு, சங்ககிரி மெயின் ரோடு, ராஜிவ்காந்தி தெரு, வடக்கு தெரு ஆகிய இடங்களில் நேற்று சாலையோர குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடந்தது.
715 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்
இந்த பணியில் கல்லூரி மாணவர்கள் உள்பட 575 தன்னார்வலர்கள் மூலம் 715 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி மண்டலம் சின்னதிருப்பதி அபிராமி கார்டன் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, காலிமனை பிரிவுகளில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை ஆணையாளர் ரவிச்சந்திரன் கண்டார். பின்னர் அவர், காலிமனைகளில் கழிவுகளை கொட்டிய, மனையை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்க அறிவுறித்தினார். மேலும் காலிமனைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக குப்பைகள் சேகரிக்கும் நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்கரவர்த்தி, திலகா, சுகாதார அலுவலர் ரவிச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.