கடலூா்,நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 64 போ் கைது
கடலூா்,நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் 64 பேரை போலீசாா் கைது செய்தனா்.;
நெய்வேலி,
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்ததை கண்டித்தும் கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே சென்னை-கும்பகோணம் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஏ. எஸ் இலஞ்செளியன், தொகுதி செயலாளர் ராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஸ்டீபன், நகர செயலாளர் இளங்கோவன், ஐ.என்.டியு.சி. சங்க தலைவர் சுகுமார், செயலாளர் ரவிக்குமார், அற்புதராஜ் மற்றும் இளைஞரணி, மாணவரணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த நெய்வேலி போலீசார் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் விரைந்து சென்று 39 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கடலூா்
இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மத்திய மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்திராஜ், நகர தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார தலைவர்கள் சீதாராமன், ஓவியர் ரமேஷ், கிஷோர், ஊடக பிரிவு மணிகண்டன், வினுசக்கரவர்த்தி, பார்த்திபன், பண்ருட்டி சபியுல்லா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் திடீரென நடுரோட்டுக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 25 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.