கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம்
விக்கிரவாண்டி அருகே கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி,
விக்கிரவாண்டி அருகே நரசிங்கனூர் கிராமத்தில் உள்ள பனந்தோப்பில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெறும் என கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் கஞ்சனூர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. இதில் கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அங்கிருந்த கஞ்சனூர் போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கைது
இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.