பென்னாகரம் அருகே விஷம் குடித்த பெண் சாவு:உறவினர்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்து தராததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீதா (28), இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கிறிஸ்டோபர் (9) என்ற மகன் உள்ளான். குடும்ப தகராறு காரணமாக கடந்த 30-ந்தேதி கீதா தனது மகனுடன் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கீதாவை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து தராததை கண்டித்து அவரது உறவினர்கள் அம்பேத்கர் சிலை எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பென்னாகரம்-ஒகேனக்கல் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.