தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்ட கோவில் யானைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு புறப்பட்டு சென்றன.
புத்துணர்வு முகாம்
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது. இந்த முகாமிற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை புறப்பட்டது.
லாரியில் சென்றது
இதையொட்டி யானை தெய்வானைக்கு பட்டாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் யானை மாலை 5.45 மணிக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் செல்வகுமார், மாவட்ட யானைகள் வளர்ப்பு குழு உறுப்பினர் டாக்டர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில் யானைகள் லாரிகளில் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.