பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்
குடியாத்தம் அடுத்த கீழ் செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மகன் சுரேந்தர் (வயது 22). குடியாத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் குடியாத்தத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 31-ந்் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் மேற்பார்வையில், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மாணவியை சுரேந்தர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ஆலங்காயம் பகுதியில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று உள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்த சுரேந்தர் மற்றும் மாணவி இருவரையும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக சுரேந்தர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.