கூடலூர்: கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
கூடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது.
கூடலூர்
கூடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கியால் சிலிண்டரில் தீ
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மண்வயல் அருகே உள்ள அச்சன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் ஜோயி(வயது 77). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜோயி சமையலறைக்கு சென்றார். பின்னர் உணவு சமைக்க கியாஸ் சிலிண்டரை திறந்து அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது கியாஸ் சிலிண்டரில் திடீரென தீ பரவியது. இதனால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.
வீடு தரைமட்டம்
உடனே கியாஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டன. மேலும் வீடு இடிந்து தரைமட்டமாகியது. இதேபோன்று வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
சரியான நேரத்தில் ஜோயி மீட்டகப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.