ஊட்டி: தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரம்

ஊட்டியில் கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-02-06 13:06 GMT
ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு களை எடுக்கும் பணி நடந்ததை
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 124-வது மலர் கண்காட்சி நடக்கிறது. 

இதற்காக பாத்திகள், நடைபாதை ஓரங்கள், மரங்களை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. நீண்ட மற்றும் குறுகிய வாழ்நாட்களை கொண்ட மலர் செடிகள் ஏப்ரல் மாதத்தில் பூக்கும் வகையில் தனித்தனியாக நடவு செய்யப்பட்டு வருகிறது.

சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், சினரேரியா, ரனுன்குலஸ், கேலா லில்லி, டேலியா, பிகோனியா, இன்கா மேரிகோல்டு, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஆன்டிரைனம், வயோலா, லைமோனியம், கலிபோர்னியா பாப்பி, நிமேசியா உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. 

ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ரக விதைகள் பெறப்பட்டு பூங்கா நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. கோடை சீசனையொட்டி 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் உறைபனியால் கருகாமல் இருக்க கோத்தாரி மிலார் செடிகள் சுற்றிலும் நிழலுக்காக வைக்கப்பட்டது.

பகலில் வெயில் வாட்டும் போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்கா நர்சரியில் தென்னை நார், இலை, தழைகள், இயற்கை உரம் கலந்த மண் பூந்தொட்டியில் நிரப்பப்பட்டு லில்லியம் உள்பட பல்வேறு ரக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. 

அதற்கு உரம் இடுவது, களை பறிப்பது, தண்ணீர் தெளிப்பது போன்ற பராமரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விதைகள் விதைத்து சிறிய நாற்றுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக கண்ணாடி மாளிகையில் சுழற்சி முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சிக்கு மலர் செடிகளுடன் கூடிய பூந்தொட்டிகளை தயார் செய்யப்பட்டு வருகின்றது. 10,000 பூந்தொட்டிகளில் மண் நிரப்பி மலர் செடிகளை நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை பல வண்ண மலர்கள் கவர உள்ளது.

மேலும் செய்திகள்