வேலூர் கலெக்டர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்
வேலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சண்முகசுந்தரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அடுக்கம்பாறை
வேலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சண்முகசுந்தரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் இன்று அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். மதியம் 12.30 மணி அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனையிலேயே 30 நிமிடம் இருந்தார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் இன்று வரை கலெக்டர் உள்பட 281 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பக்க விளைவுகள் இல்லை
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்ட டோஸ் போடப்பட்டு வருகிறது.
பொது மக்களிடம் நிலவும் அச்சம், சந்தேகத்தை போக்கவே நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். பக்கவிளைவு இருப்பதாக கூறுவது தவறு, இதுவரை எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள சி.எம்.சி. மற்றும் நாராயணி ஆகிய 2 தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி இலவசமாக போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன், தாசில்தார் ரமேஷ், கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவல்லி, வின்சென்ட் ரமேஷ்பாபு, அடுக்கம்பாறை ஊராட்சி செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.