திருச்சியில் பரபரப்பு: லாரியில் கிடந்த ஆணின் எலும்புக்கூடு
திருச்சியில் லாரியில் ஆணின் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி- அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே உள்ள ஒரு காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையால் காலிமனையில் மழைநீர் தேங்கி லாரி பாதிஅளவுக்கு தண்ணீரில் மூழ்கி வெளியே எடுக்க முடியாதபடி சேற்றில் சிக்கி கொண்டு இருந்தது.
ஓராண்டுக்கு பிறகு தற்போது தண்ணீர் வடிந்து விட்டதால், லாரியை வெளியே எடுத்து பழுது பார்க்க லாரியின் உரிமையாளர் திட்டமிட்டார். இதற்காக நேற்று காலை லாரியை அங்கிருந்து வெளியே எடுத்தனர்.
அப்போது, டிரைவர் இருக்கையின் அருகே அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இந்த ஆணின் எலும்புக்கூடு யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
நீண்டநாட்களாக லாரியை எடுக்காமல் அதே இடத்தில் இருந்ததால் மதுபோதையில் லாரியில் ஏறி படுத்த நபர் அப்படியே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். தொடர்ந்து அவர் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்? என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.