திருச்சியில் காவல்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் காவல்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி,
32-வது சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம், உதவி கமிஷனர்கள் முருகேசன், விக்னேஷ்வரன், இன்ஸ்பெக்டர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அரசு மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு பாதுகாத்து கொள்வது? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு கோட்ட அலுவலர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு உபகரணங்களை வைத்து புகை மூலம் தீயை அணைத்தல், ஈரசாக்கு மூலம் தீயை அணைத்தல் போன்றவற்றை செய்து காட்டினர். விபத்துகளில் சிக்கிய வாகனங்களை துரிதமாக மீட்பது, கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை விரைந்து காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.