திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் வழிப்பறி: வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பார்க் ரோட்டில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது சொந்த ஊர் திருப்புவனம் ஆகும்.தினேஷ்குமார் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி, அடிதடி வழக்கு, வாகன விபத்து வழக்கு, திருட்டு வழக்கு, பணம் கேட்டு மிரட்டிய வழக்கு உள்பட மொத்தம் 9 வழக்குகள் உள்ளன.
இவர் தொடர்ந்து பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் தினேஷ்குமாரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ் குமாரிடம் நேற்று ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை திருப்பூர் மாநகரத்தில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.