ஓசூரில் கலப்பட டீத்தூள் விற்ற வியாபாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ஓசூரில் கலப்பட டீத்தூள் விற்ற வியாபாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டீக்கடைகள் மற்றும் சிறு பலசரக்கு கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து ஓசூர் அருகே பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம் மற்றும் சிப்காட் பகுதியில் உள்ள கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சில கடைகளில் டீத்தூள் மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் பேகேபள்ளி கடை ஒன்றில் எடுக்கப்பட்ட டீத்தூள் மாதிரியில் மட்டும் கலப்படம் இருப்பதாக அறிக்கை கிடைத்தது. அதனடிப்படையில் ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன், அந்த பாதுகாப்பற்ற கலப்பட டீத்தூள் விற்ற வியாபாரி சிவராமன் மீது ஓசூர் ஜே.எம்.2 குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கை நடத்தி வந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு நீதிபதி தாமோதரன், குற்றவாளி சிவராமன் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.