பேராசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை
பேராசிரியர் திட்டியதால் மனவருத்தம் அடைந்த கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மாணவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி முதல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய மகன் சூரிய பிரகாஷ். மகள் பத்ம பிரியா (வயது 21). இதில் சூரிய பிரகாஷ் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். பத்மபிரியா மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். செல்வகுமார் கப்பலூர் தொழிற்பேட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். மாணவி பத்ம பிரியா சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பத்மபிரியாவை, பேராசிரியர் ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது.
விஷம் அருந்தி தற்கொலை
இதனால் மனவருத்தம் அடைந்த பத்மபிரியா சோகத்துடன் வீடு திரும்பினார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இதை கவனித்து, மாணவியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பத்மபிரியா பரிதாபமாக இறந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்பத்திரி முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவி சாவு குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பத்மபிரியாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பேராசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.