தகுதி, திறமைக்கே முன்னுரிமை: பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடையாது; துணை இயக்குனர் தகவல்

பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்படாது. தகுதி, திறமையின் அடிப்படையிலேயே வேலை வழங்கப்படும் என்று துணை இயக்குனர் கூறினார்.

Update: 2021-02-06 00:28 GMT
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) எம்.கருணாகரன் தொடங்கி வைத்து பேசும் போது கூறியதாவது:- வேலை தேடி வருபர்கள் தங்களது தகுதியை அதற்குரிய இணையதளத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் வேலை வழங்குபவர்கள் அதனை தெரிந்து கொள்ள முடியும். வேலை தேடுவதையே ஒரு வேலையாக வைத்துக்கொண்டால் தான் நிரந்தர வேலை பெற முடியும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து விட்டால் போதும் வேலை தானாக தேடி வரும் என யாரும் நினைக்கவேண்டாம்.

பதிவு மூப்பு அடிப்படையில் (சீனியாரிட்டி) வேலை வழங்க தேவை இல்லை. தகுதி, திறமையின் அடிப்படையில் தான் வேலை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. எனவே வேலைதேடுபவர்கள் வேலை பெறுவதற்கு தங்களது தகுதி, திறமையை வளர்த்துக்கொள்வதோடு கிடைத்த வேலையை தக்க வைத்துக்கொள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இ்ந்த முகாமில் 17 தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு நேர்முக தேர்வினை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 256 பேர் பங்கேற்றனர். அவர்களில் 51பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டதாக மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்