மூங்கில்துறைப்பட்டு அருகே கால் ஒடிந்த புள்ளி மான் சாவு

மூங்கில்துறைப்பட்டு அருகே கால் ஒடிந்த நிலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் பரிதாபமாக செத்தது.

Update: 2021-02-06 00:24 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், கானாங்காடு, பாக்கம், புதூர், வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் மான், கரடி, முயல், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. 

புதூர் ஏரியில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. அதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று கடந்த சில தினங்களாக கால் முறிந்த நிலையில் சுற்றி வந்த நிலையில் ஏரியின் அருகில் உள்ள கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அங்கிருந்து எழுந்து தடுமாறியபடி ஏரிக்குள் சென்ற மான் கீழே விழுந்து செத்தது. 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் மானை பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைத்தனர். மேலும் மர்ம நபர்கள் வேட்டையாடியதால் காயம் அடைந்து மான் செத்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்