இறந்த வளர்ப்பு நாய்க்கு இறுதிச்சடங்கு நடத்திய ஊழியர்கள்

தஞ்சை ராணுவ கேண்டீனில், இறந்த வளர்ப்பு நாய்க்கு இறுதிச்சடங்கு நடத்திய ஊழியர்கள், கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து நெகிழ்ச்சி அடைய வைத்தனர்.

Update: 2021-02-05 23:14 GMT
ராணுவ கேண்டீனில் வளர்ந்த நாய் 
நம்முடைய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணி நாய். பலருக்கும் மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல் வீட்டை காவல் காப்பதிலும் நாய்க்கு முக்கிய பங்கு உண்டு. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட நாயை பலர் தங்களது குழந்தைகளை போலவே பராமரித்து வருகின்றனர்.

இப்படி செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் திடீரென இறந்ததால் அந்த நாய்க்கு முறைப்படி இறுதிமரியாதை செய்ததுடன், நாயின் இறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கண்ணீர் அஞ்சலி விளம்பர பதாகைகளும் வைத்து ராணுவ கேண்டீன் ஊழியர்களும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர். 

அதன்விவரம் வருமாறு:-
செல்லமாக வளர்ந்தது 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் முனியாண்டவர் காலனி அருகே ராணுவ கேண்டீன் உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கேண்டீனில் 15 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த 8½ ஆண்டாக ‘மார்பிய‌‌ஷ்’ என்ற ஆண் நாயை கேண்டீன் ஊழியர்கள் செல்லமாக வளர்த்து வந்தனர். மார்பிய‌‌ஷ் மீது ஊழியர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற குழந்தையை போல பாசம் காட்டி வந்தனர்.இந்த நாய், சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை தான் விரும்பி சாப்பிட்டு வந்தது.  பொதுவாக நாய்களுக்கு பிஸ்கட் மீது விருப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் மார்பியஷ்சுக்கு அவ்வளவாக பிடிக்காது. இப்படி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய்க்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிடுவதை தவிர்த்ததால் கால்நடை மருத்துவமனைக்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

இறந்தது
அங்கு சிகிச்சை அளித்துவிட்டு கேண்டீனுக்கு அழைத்து வந்த நாய் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. தனது உற்ற நண்பனை இழந்ததை போல் நாயின் உடலை பார்த்து ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். 
நாயின் இறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், நாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாயின் உருவப்படத்துடன் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்கப்பட்டது.

இறுதிச்சடங்கு
மேலும் கேண்டீன் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என பலர் நாயின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை நாய்க்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது. 
மனிதர்களுக்கு செய்யப்படுவதைப்போன்று நாய்க்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.. பின்னர் கேண்டீன் வளாகத்தில் குழி தோண்டப்பட்டு, அதனுள் பால், மஞ்சள், எள் ஆகியவற்றை தெளித்து முறைப்படி நாயை அடக்கம் செய்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

வருத்தம் 
இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, நாங்கள் நாயை பைரவராக பாவித்து வளர்த்து வந்தோம். ஒரு குழந்தை போல வளர்த்தோம். கேண்டீனில் ஒரு காவலாளியை போல் வலம் வந்தது. புதிய நபர்கள் யாராவது கேண்டீனுக்கு வந்தால் எளிதில் அடையாளம் கண்டுவிடும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பொருட்கள் வாங்குவதற்காக வரும்போது பையை அந்த நாயிடம் சிலர் கொடுப்பார்கள். அந்த பையை எடுத்துக்கொண்டு சரியான இடத்தில் சென்று வைத்து விடும்.

கேண்டீனுக்கு வரும் அனைவருக்கும் அந்த நாய் செல்லபிள்ளையாகி விட்டது. பாம்பு, கீரி போன்றவை கேண்டீனுக்கு வந்தால் குறைத்து காண்பித்து விடும். ஊழியர்கள் நாங்கள் யாராவது வெளியூருக்கு சென்று விட்டால், நாங்கள் வரும் வரை வாசலிலேயே நின்று கொண்டு இருக்கும். சில நேரங்களில் சாப்பிடாமல் நிற்கும். மார்பிய‌‌ஷ் இழப்பு எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்