பெண்ணாடம் அருகே ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கொள்ளை மா்மநபா்களுக்கு பாேலீஸ் வலைவீச்சு
பெண்ணாடம் அருகே ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை கொள்ளை
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும், கோவில் தர்மகர்த்தா கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர்.
வலைவீச்சு
அப்போது கோவிலில் இருந்த 2 அடி உயர ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலையும், அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை, தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.