சென்னையில் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடி மையங்கள் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னை மாவட்டத்தில் 1,053 இடங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-02-05 20:22 GMT
சென்னை,

சென்னையை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பான அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தலைமையில் நேற்று அம்மா மாளிகையில் நடைபெற்றது.

அப்போது கமிஷனர் கோ.பிரகாஷ் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் ஆயிரம் வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துணை வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்ற தொகுகளில் ஏற்கனவே 901 இடங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டிய நிலையில் 2 ஆயிரத்து 369 துணை வாக்குச்சாவடிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வாக்குச்சாவடிகள் கூடுமானவரை ஏற்கனவே வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது 1,053 இடங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்பட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். இது தொடர்பாக வாக்குச்சாவடி மையங்களில் வரைவு பட்டியலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துகளை 2 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை கமிஷனர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா, மண்டல அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்