இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ‘பாப்’ பாடகிகளின் படத்தை கிழித்து இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் மட்டுமின்றி ‘பாப்’ பாடகிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள் ஒய்.எம்.ஆர்.பட்டியில் இருந்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, இணை செயலாளர் ஜெகதீஷ், வேடசந்தூர் தொகுதி செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடகிகள் படம் கிழிப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ‘பாப்’ பாடகிகள் ரிகானா, மியா கலிபா உள்ளிட்ட 4 பாப் பாடகிகளின் புகைப்படங்களை, இந்து மக்கள் கட்சியினர் கிழித்தனர்.
அப்போது ‘பாப்’ பாடகிகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
மேலும் 3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.