உத்திரமேரூர் அருகே, கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் சாவு - உரிமையாளர்கள் 4 பேர் மீது வழக்கு

உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கல்குவாரி உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-02-05 19:48 GMT
உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிவு ஏற்பட்டு ஒருவர் இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்து போனார்.

பாறை சரிந்து இறங்கிய இடத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீட்பு பணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டு இருந்ததால் மீட்பு பணி தொடங்குவது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

விபத்து தொடர்பாக கல் குவாரி உரிமையாளர்கள் தேவராஜன், சரவணன், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோர் மீது சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்குவாரி விபத்தில் இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் நேற்று காலை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருமுக்கூடல்-மதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்