428 வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிப்பு

தேனி மாவட்டத்தில் 428 வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-02-05 18:59 GMT
தேனி:

ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து புதிதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரித்து புதிதாக துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1, 221 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

428 வாக்குச்சாவடிகள்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 428 வாக்குச்சாவடி மையங்களில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளனர். 

இந்த வாக்குச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி புதிதாக உருவாக்கப்பட உள்ள வாக்குச்சாவடிகளில் 328 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே அமைந்துள்ள அதே இடங்களிலும், 100 வாக்குச்சாவடிகள் வேறு இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன. 

எனவே வாக்குச்சாவடிகள் மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை தெரிவித்தனர். 

அவை குறித்து தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்