நபிகள் நாயகம் பற்றி அவதூறு பேச்சு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனா்.;
விழுப்புரம்,
நபிகள் நாயகத்தை பற்றி அவதூறாக பேசிய கல்யாணராமன், ஜெய்சங்கர் ஆகியோரை கண்டித்தும், அவர்கள் இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் விழுப்புரம் வட்டார ஜமாஅத் ஒருங்கிணைப்புக்குழுவினர், உலமாக்கள் சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
அப்போது கல்யாணராமன், ஜெய்சங்கர் ஆகியோரை கண்டித்தும், அவர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் புகார் மனு கொடுத்தனர்.அந்த மனுவில், கல்யாணராமன், ஜெய்சங்கர் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் 275 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.