விழுப்புரத்தில் நீடிக்கும் போராட்டம்: 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் 80 பேர் கைது
விழுப்புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது போடப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
80 பேர் கைது
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று 4-வது நாளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பார்த்திபன், சிவக்குமார், சரவணன், பக்கிரிசாமி, ஜெயந்தி, உமா, மலர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.