திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி பிரமுகருக்கு கத்திவெட்டு
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி பிரமுகருக்கு கத்திவெட்டு விழுந்தது.
நல்லூர்:
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி பிரமுகருக்கு கத்திவெட்டு விழுந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இந்து முன்னணி பிரமுகர்
திருப்பூர், சந்திராபுரம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர், 5- வது வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). திருப்பூர் கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் கோஷ்டிக்கும் இடையே கடந்த 8 மாதத்திற்கு முன்பு சந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தகராறு ஏற்பட்டது.
அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் பிரபாகரனுக்கும், மற்றொரு தரப்பான உதயகுமார் கோஷ்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில் ராக்கியாபாளையம் பிரிவிலிருந்து சந்திராபுரம் அம்மா உணவகம் அருகில் பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர், பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பிரபாகரனுக்கும் உதயகுமாருக்கும் இடையை சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் ஆடு அறுக்கும் கத்தியால் பிரபாகரனை வெட்டி உள்ளனர். அதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி பிரபாகரன் கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சல் போட்டதால் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
போலீசில் ஒருவர் சரண்
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் பிரபாகரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் முருகன் (35), லட்சுமணன் (32) அழகேசன் (30), ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் உதயகுமார் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்து முன்னணி பிரமுகர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.