தேர்தலுக்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரத நாடகம் நடத்துகிறார் - நமச்சிவாயம்

தேர்தலுக்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரத நாடகம் நடத்துகிறார் என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2021-02-05 15:33 GMT
புதுச்சேரி:

ரோடியர் மில் திடலில் பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம்  இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவை மாநில இளைஞர்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. உறுதுணையாக இருக்கும். முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தலுக்கு தேர்தல் மக்களை ஏமாற்ற உண்ணாவிரத நாடகத்தை தொடங்குவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் எங்களை கவர்னர்  மாளிகை    முன்   நடுத்தெருவில் படுக்க வைத்தார்.

புதுவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சட்டமன்ற கூட்டத்தையும் நடுரோட்டில் நடத்திய பெருமை அவரையே சேரும். சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இப்போது காங்கிரஸ் தொண்டர்களை நடுரோட்டில் அமரவைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.

தேர்தல் வரும் வரை மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டு தேர்தல்வரும் நிலையில்தான் அவருக்கு கவர்னரைப்பற்றி சிந்தனை வரும். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது என்னை ஏமாற்றினார்.

 பொறுத்துக்கொண்டேன். இப்போது மாநில மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுகிறார்.

காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற தேர்தலின்போது கவர்னர் கிரண்பெடியை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகவும், இப்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ளநிலையில் உண்ணாவிரதம் இருந்தால் மக்களை ஏமாற்றி  எளிதாக வெற்றி  பெற்று விடலாம் என்று பேசியுள்ளார்.

புதுவை மக்கள் அரசியல் ஞானம் உள்ளவர்கள். அவர்கள் இனியும் ஏமாற தயாரில்லை. அவரது ஏமாற்று வேலை இனி மக்களிடம் பலிக்காது. நாராயணசாமியின் எண்ணங்களை மக்களிடம் பா.ஜ.க.வினர் கொண்டுசெல்ல வேண்டும். 

ஹெல்மெட் அணியும் பிரச்சினை தொடர்பாக கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினோம். மக்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் கவர்னராக இருந்தாலும், முதல்-அமைச்சராக இருந்தாலும் பா.ஜ.க. ஏற்காது. புதுவை மக்களுக்கு சங்கடம் தரும், ஏற்க முடியாத வி‌‌ஷயத்தை யார் செய்தாலும் அதனை எதிர்த்து போராட தயாராக உள்ளோம்.

தேர்தல் நேரத்தில் கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். நமது எண்ணம், செயல், சிந்தனை முழுவதும் புதுவை மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதாக இருக்கவேண்டும். நம் உணர்வுகளை தூண்டி நாம் தவறு செய்தால் அதில் அரசியல் செய்ய காத்திருக்கின்றனர். அதற்கு நாம் எந்த வகையிலும் இடம்தரக்கூடாது. இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

மேலும் செய்திகள்