வயதான தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பறிப்பு

திருப்பத்தூர் அருகே வயதான தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-02-05 14:27 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறையை அடுத்த சோமலாபுரம் அருகில் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் மணி (வயது 72), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரின் மனைவி சிவகாமி (68). கணவன், மனைவி இருவரும் தனியாக விவசாய நிலத்தைப் பார்த்துக்கொண்டு வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்மநபர்கள் 3 பேர் மணியின் வீட்டுக்கு வந்து, சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த மணி வெளியே வந்து பார்த்தார்.

அப்போது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 3 பேர் நின்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட முயன்றார். அதற்குள், 3 பேரில் ஒருவன் மணியின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவதைக் கண்ட அவரின் மனைவி சிவகாமி கூச்சலிட முயன்றார். 

உடனே அவருடைய கழுத்திலும் மற்றொருவன் கத்தியை வைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டினான். முகமூடி கும்பலைச் சேர்ந்த மற்றொருவன் சிவகாமி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் என 5 பவுன் நகையை பறித்துக் கொண்டான். முகமூடி கும்பல், நாங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றதும், சத்தம்போட்டு கூச்சலிட்டால் நாங்கள் மீண்டும் வந்து உங்களை குத்திக் கொன்று விடுவோம், என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்‌.

இதுகுறித்து மணி, திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது துணை போலீ்ஸ் சூப்பிரண்டு கூறுகையில், முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படையை அமைத்துள்ளோம். குற்றவாளிகளை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் கைது செய்வோம். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர், என்றார்.

மேலும் செய்திகள்