சினிமா பாணியில், போலீஸ் வாகனம் மீது கல்வீசி கைதானவரை மீட்டு சென்ற கும்பல் 3 போலீசார் காயம்
போலீஸ் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி கைதானவரை கும்பல் மீட்டு சென்றது. இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர்.
தானே,
கல்யாணில் இருந்து கசாரா செல்லும் வழித்தடத்தில் அம்பிவிலி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே வசித்து வரும் கும்பல் ஒன்று நகைதிருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் மிராபயந்தர்- வசாய்விரார் குற்றப்பிரிவு போலீசார் அக்கும்பலை சேர்ந்த ஒருவரை பிடிக்க வாகனத்தில் இராணிபாடா பகுதிக்கு சென்றனர்.
இதையடுத்து போலீசார் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். அந்த வாகனம் அம்பிவிலி ரெயில் நிலையம் நோக்கி வந்த போது அங்கு ரெயில்வே வழித்தடத்தில் சிக்னல் போடப்பட்டு இருந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இராணிபாடாவை சேர்ந்த கும்பல் அங்கு திரண்டனர்.
மேலும் போலீசார் பிடித்து வைத்திருந்த நபர் இருந்த கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண்களும் அடங்குவர்.
திடீரென கும்பல் தாக்கியதால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இந்த கல்வீச்சில் 3 போலீசார் காயமடைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கும்பல் போலீசாரிடம் இருந்து கைதானவரை விடுவித்து அழைத்து சென்றனர்.
இதற்கிடையே காயமடைந்த 3 போலீசார் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து கடக்பாடா போலீசார் தாக்குதல் நடத்திய கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பட பாணியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.