பிறரை காப்பாற்றுவது தீயணைப்பு வீரரின் குறிக்கோளாக இருக்க வேண்டும், வடமேற்கு மண்டல துணை இயக்குனர்

தன்னுயிரை கொடுத்து பிறரை காப்பாற்றுவது தீயணைப்பு வீரரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சிவிஜயகுமார் பேசினார்.

Update: 2021-02-05 10:57 GMT
வேலூர்

தன்னுயிரை கொடுத்து பிறரை காப்பாற்றுவது தீயணைப்பு வீரரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சிவிஜயகுமார் பேசினார்.

கருத்தரங்கு

தமிழ்நாடு தீயணைப்போர் பாதுகாப்பு கருத்தரங்கு வேலூரில் இன்று நடந்தது. வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சிவிஜயகுமார் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற துணை இயக்குனர்கள் விஜயகுமார், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர் குமார் வரவேற்றார்.

கருத்தரங்கில் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேசியதாவது:-

திருச்சியில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்ற தீயணைப்பு வீரர் சமீபத்தில் பணியின் போது உயிரிழந்தார். நாம் இத்தனை ஆண்டுகளாக என்ன கற்றுக் கொண்டுள்ளோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு கட்டுக்கோப்பாகவும் நேரம் தவறாமலும் பணியாற்ற வேண்டும். விபத்து நடந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும்.

குறிக்கோள்

தன் உயிரை கொடுத்து பிறரை காப்பாற்றுவது தான் நமது முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். பணியின் போது இடரில் சிக்கிய நம்முடன் பணியாற்றுபவர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும். ஓய்வு என்பது நமக்கு கிடையாது. நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான மக்களில் நீங்கள் தான் சிறந்த தீயணைப்பு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்.

ஒரு விபத்து நடந்தால் அங்கு தீயணைப்பு வீரர்கள் சென்றால் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.

அங்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்து நிற்கக் கூடாது. துரிதமாக செயல்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூண் என நிரூபிக்க வேண்டும். தீயணைப்பு வீரர்கள் முதல் நிலையாக செயல்படுகிறார்கள். வந்தோம், இருந்தோம், சென்றோம் என்று இருக்கக்கூடாது. பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். தீயணைப்பு வீரர்கள் செயல்திறன்மிக்க வீரர்களாக இருக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கருத்தரங்கில் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்