நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாசனத்துக்காக நங்காஞ்சியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-02-05 05:46 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. 

இதன் மொத்த உயரம் 39.37 அடி ஆகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பல பகுதிகள் பாசன வசதி பெறுகிறது.

 இதற்கிடையே வடகிழக்கு பருவமழையால், அணை நிரம்பி முழுகொள்ளளவை எட்டியது.


இதையடுத்து அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

அதன்படி நங்காஞ்சியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 


இதில் திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, கரூர் கலெக்டர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். 

இதைத் தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-
6,250 ஏக்கர் பாசனம் 


நங்காஞ்சியாறு அணையில் இருந்து இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை 40 நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

மொத்தம் 192 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

 இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.


அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதியில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதன்படி திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்மேலாண்மை செய்து பயன்பெற வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதில் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு வடிநில கோட்டம்) கோபி, உதவி பொறியாளர்கள் சுஜாதா, சரஸ்வதி, சிவபிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்