மறைவாக வைத்திருந்த சாவி மூலம் வீட்டை திறந்து 10 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு

மறைவாக வைத்திருந்த சாவி மூலம் வீட்டை திறந்து 10 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருடப்பட்டது.

Update: 2021-02-05 04:51 GMT
பூந்தமல்லி, 

மாங்காடு சையத் சாதிக் நகரை சேர்ந்தவர் கனிம் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தாஹிரா பேகம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மகன் இப்ராகிம். ராயபேட்டையில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இப்ராகிம் பள்ளிக்கு சென்று விட்டான். மகன் பள்ளி முடித்து வந்து வீட்டின் கதவை திறக்க ஏதுவாக வீட்டின் வெளியே உள்ள குளியலறை அருகே வீட்டு சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து வந்த தாஹிரா பேகம் வீட்டை திறந்து சமையல் செய்து கொண்டிருந்தார். வேலை முடித்து கனிம் வீட்டுக்கு வந்து பீரோவை திறக்க முயன்றார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் திருட்டு

பீரோவில் துணிக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். வீட்டுக்கு வெளியே சாவி வைப்பதை பார்த்த நபர்கள் சாவியை எடுத்து வீட்டை திறந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்