வடகாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
வடகாடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் மாங்காடு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நெல் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதோடு பல இடங்களில் நெல்வயல்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
சேதமடைந்த பயிர்களை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீடு செய்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு குழுவினர் வடகாடு பகுதிக்கு வரவில்லை என்று இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், இந்தபகுதிகளில் தற்போது அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதிய நேரங்களில் வெயில் அடிப்பதால் மழையில் இருந்து தப்பி பிழைத்த நெல்வயல்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல் கொள்முதல் நிலையம்
அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் அங்குள்ள வடகாடு மாரியம்மன் கோவில் பகுதியில் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல்மணிகளையாவது கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இல்லையென்றால், மொத்த வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு தான் விற்பனை செய்ய நேரிடும் என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.