அரசு ஊழியர்கள் 200 பேர் கைது

திண்டுக்கல்லில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-05 03:13 GMT
திண்டுக்கல்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  


21 மாத நிலுவை தொகை மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். 

கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்பட தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதில் கடந்த 2-ந்தேதி முதல் தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் 3-வது நாளாக திரண்டனர். 

இதையடுத்து அங்கிருந்து திண்டுக்கல் பஸ்நிலையம் நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். 

இதில் மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் முபாரக்அலி, பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
200 பேர் கைது 
இந்த ஊர்வலத்தின் போது 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டபடி சென்றனர். 

இறுதியில் பஸ்நிலையம் முன்பு ஏ.எம்.சி. சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் ஏ.எம்.சி. சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 

இதில் பெண்கள் உள்பட மொத்தம் 200 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


இந்தநிலையில் அரசு ஊழியர்கள் சிலர் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டம் நள்ளிரவு வரை நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்