ஈரோட்டில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் திருட்டு
ஈரோட்டில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு சூளை வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 53). ஜவுளி அதிபர். இவரது வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை மீட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாலமுரளி தனது குடும்பத்தினருடன் காரில் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது காரை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் பாலமுரளி வீட்டிலும், சுற்றுப்புற பகுதியிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் காரில் வந்த மர்ம நபர்கள் பாலமுரளி வீட்டினை நோட்டமிடுவதும், பின்னர் நள்ளிரவு 1.30 மணி அளவில் கேட்டில் போடப்பட்டு இருந்த பூட்டை உடைத்து காரை திருடி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றார்கள்.