தூய்மை நகரமாக பராமரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி நகராட்சியை தூய்மை நகரமாக பராமரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.;

Update:2021-02-05 05:59 IST
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து  நுண்உர மையத்திற்கு எடுத்து சென்று உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சிக்கு சொந்தமான துருகம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் போதிய இடவசதி இல்லை. இதனால் நகராட்சிக்கு சொந்தமான மயானப் பகுதியில்  தரம்பிரிக்கப்படாமல் ஒருங்கிணைக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு மயானம் நிரம்பி உள்ளது. 

இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, இந்த குப்பை கழிவுகளை தனியார் இடத்திற்கு எடுத்து சென்று அறிவியல் ரீதியான முறையில் அகற்றவும், கள்ளக்குறிச்சி நகராட்சியை தூய்மை நகரமாக பராமரிப்பது தொடர்பாக பொது மக்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம்  கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு  நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க.நகர செயலாளர் பாபு, முன்னாள் நகர மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், நகராட்சி துப்பரவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தச்சூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து, அந்த இடத்தில் கள்ளக்குறிச்சி மயானத்தில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை எடுத்துச்சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

மேலும் இந்த தனியார் இடத்திற்கு வாடகை அல்லது குத்தகை கொடுப்பதற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும்,  குப்பைகளை தரம் பிரிக்கும் போது கழிவு நீர் வெளியேற்றுவதற்கு முன்னாள் நகரமன்ற தலைவர் பாலகிருஷ்ணன ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும்,  கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறக்காமல் இருப்பதற்கு பசுமை வலை மற்றும் இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கு தி.மு.க. நகர செயலாளர் சுப்புராயலு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும் தருவதாக தெரிவித்தனர். 

ரோட்டரி, அரிமா, அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும்  வணிகர் சங்கங்கள் சேர்ந்து கள்ளக்குறிச்சி மயானத்தில் தரம் பிரிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தச்சூரில் உள்ள இடத்திற்கு லாரி மூலம் கொண்டு செல்வதற்கு ரூ. 1¼ லட்சம் தருவதாகவும் தெவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சுப்புராயலு, ஏ.கே.டி.கல்வி நிறுவன தாளாளர் ஏ.கே.டி.மகேந்திரன், அரசு வக்கீல் சீனிவாசன், நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கண்ணன், வணிகர் சங்க நகர தலைவர் ஸ்ரீதர், பா.ஜ.க.மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், நகர தலைவர் சர்தார்சிங், போட்டோ சங்கத் தலைவர் ரங்கன், தொழிலதிபர் ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் லக்கிஜவகர், ஆருண் மற்றும் வியாபாரிகள், ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்